வனப்பகுதியில் பல கி.மீட்டர் நடந்து சென்று ஆம்புலன்சில் 8வது குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி

வனப்பகுதியில் பல கி.மீட்டர் தூரம் நடந்து சென்ற கர்ப்பிணி ஆம்புலன்சில் 8வது குழந்தை பெற்றெடுத்தார்.

Update: 2023-04-12 11:51 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டம் அரிக்கல் பகுதியில் உள்ள அடந்த வனப்பகுதி உள்ளது. இங்கு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ராஜன் - மினி தம்பதி தனியே வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, மினி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

கர்ப்பிணியின் உடல்நலம் குறித்து கண்காணிக்க அப்பகுதியில் சுகாதார ஊழியர்கள் தற்காலிக முகாம் அமைத்து தங்கி இருந்தனர். ஆனால், யானைகளின் நடமாட்டம் இருந்ததால் சுகாதார ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதனிடையே, மினிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், தனது 7 பிள்ளைகளையும் வனப்பகுதியில் உள்ள தனது வீட்டில் விட்டுவிட்டு மினி தனது கணவர் ராஜனுடன் வனப்பகுதியில் இருந்து கிழே இறங்கி வந்துள்ளார்.

அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்த மினி சீததோடு பகுதியை அடைந்தார். அங்கு ஆம்புலன்ஸ் மூலம் சலக்கயம் நோக்கி புறப்பட்டார். ஆனால், வலி மிகவும் அதிகமான நிலையில் மினிக்கு சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். அவருக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, மினியும் அவரது பெண்குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனையில் தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிள்ளைகள் அனைவரும் வனப்பகுதியில் தனியாக இருப்பதாகவும் உடனடியாக செல்ல வேண்டும் என கூறி மினியும் கணவர் ராஜனும் பச்சிளம் குழந்தையும் வனப்பகுதிக்கு திரும்பி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்