கட்சி மேலிட தலைவர்கள் நேரம் ஒதுக்கியதும் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து ஆலோசனை நடத்த டெல்லி பயணம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

கட்சி மேலிடம் நேரம் ஒதுக்கியதும் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து ஆலோசனை நடத்த டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-10-18 18:45 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சி மேலிடம் முடிவு

கட்சி மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. சந்திக்க நேரம் கிடைத்ததும் நான் டெல்லி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இந்த வார இறுதிக்குள் டெல்லி செல்ல வாய்ப்பு உள்ளது. மந்திரிசபையை விஸ்தரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். என்னை நேரில் சந்தித்து இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசினர். இதுகுறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசிக்க உள்ளேன். இந்த விஷயத்தில் மேலிடம் தான் இறுதி முடிவு எடுக்கும்.

ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, ஒக்கலிகர் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கேட்டுள்ளார். இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த பரிந்துரை அடிப்படையில் தான் அரசு முடிவு எடுக்க முடியும். இன்னும் பல சமூகங்கள் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது அல்லது வேறு பிரிவுக்கு மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

போலீசாருக்கு உத்தரவு

இந்த விஷயத்தில் அரசு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, சட்ட வரம்புக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கும். பெங்களூருவில் சாலை குழியால் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது, சாலை பள்ளங்களை மூடாதது ஏன் என்பது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளேன்.

மேலும் அந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். சாலையில் குழிகளை மூடும்போது அது சமநிலையில் இருக்கும்படி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்