மஸ்கட்டில் இருந்து கடத்தல்: மங்களூரு விமான நிலையத்தில் ரூ.38¼ லட்சம் தங்கம் சிக்கியது

மஸ்கட்டில் இருந்து மங்களூருவுக்கு கடத்திய ரூ.38¼ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்கல்லை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-09-30 18:45 GMT

மங்களூரு;

சர்வதேச விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், மஸ்கட், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விமான நிலையத்தில் மத்திய தொழில்நுட்பத்துறை அதிகாரிகள், விமானநிலைய போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கடத்தி வரும் தங்கம், போதைப்பொருட்கள் போன்றவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவது வழக்கமாக நடத்து வருகிறது.


தங்கம் கடத்தல்

இதுபோல் நேற்றுமுன்தினம் மஸ்கட்டில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் மஸ்கட்டில் இருந்து மங்களூருவுக்கு வந்திறங்கிய தனியார் விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

ரூ.38¼ லட்சம் மதிப்புள்ள...

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் பட்கல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.38 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 752 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் சுங்கத்துறை அதிகாரிகள், அவர்கள் இருவரையும் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கைதானவர்கள் பெயர்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்