பெங்களூரு மார்க்கெட்டில் வீடியோ எடுத்த வெளிநாட்டு யூடியூபரை தாக்க முயன்ற வியாபாரி கைது

பெங்களூரு சிக்பேட்டையில் உள்ள மார்க்கெட்டில் வீடியோ எடுத்தபோது வெளிநாட்டை சேர்ந்த யூடியூபரை தாக்க முயன்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-12 21:15 GMT

பெங்களூரு:

சண்டே பஜார்

பெங்களூரு சிக்பேட்டை பகுதியில் சண்டே பஜார் உள்ளது. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், இந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால் பலரும் கூட்டம், கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். இதனால் அந்த பகுதியில் எப்போதும் கடுமையான நெருக்கடி காணப்படும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

இந்த பஜார் பகுதிக்கு வருபவர்கள் சிலர் இங்குள்ள மக்கள் கூட்டத்தை வீடியோ எடுத்து தங்களின் யூ.டியூப் சேனல்களில் பதிவிடுகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டை சேர்ந்த யூடியூபர் ஒருவர், வீடியோ எடுத்தபோது வியாபாரி ஒருவர் அவர் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்தை சேர்ந்தவர் பெட்ரோ மோடா. இவர் பிரபல யூடியூபர் ஆவார். இவர் எங்கு சென்றாலும் அதுதொடர்பாக வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

இந்த நிலையில் அவர் பெங்களூருவுக்கு சுற்றுலா வந்து இருந்தார். அப்போது சிக்பேட்டை பகுதியில் உள்ள சண்டே மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு அவர் சாலையில் நடந்து சென்றபடி வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வியாபாரி ஒருவர், அவரது கையை பிடித்து இழத்து அவரை தடுத்து நிறுத்தினார். மேலும் இங்கு வீடியோ எடுக்க கூடாது என கூறி அவரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரை தாக்குவதற்கு முயன்றார்.

வீடியோ வைரல்

இதையடுத்து அங்கிருந்து யூடியூபர் தப்பி சென்றார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

மேலும் பெங்களூருவில் உள்ள பிரபல மார்க்கெட்டில் வியாபாரி ஒருவர் தன்னை மறித்து தாக்க முயன்றதாக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைக்கண்ட பலரும், வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

வியாபாரி கைது

இந்த நிலையில் வீடியோ குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்த வீடியோ அண்மையில் நடந்த சம்பவம் கிடையாது எனவும், அந்த வீடியோவில் வெளிநாட்டவரை தாக்க முயன்ற வியாபாரியான நவாப் ஷெரீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான வியாபாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்