பெங்களூருவில் தக்காளி விலை ரூ.100-ஐ தொட்டது
பெங்களூருவில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது.
பெங்களூரு:-
சாகுபடி பாதிப்பு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10-ந் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எங்கும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அதிகமாக மழை பொழியும் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களே வறண்ட நிலையில் காட்சி அளிக்கின்றன. குறித்த நேரத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயம் குறிப்பாக தோட்டக்கலை பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெங்களூருவில் சந்தைகளுக்கு தக்காளி உள்பட காய்கறிகளின் வரத்து பெருமளவில் சரிந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்று வந்த நிலையில் நேற்று அது
100 ரூபாயை தொட்டுள்ளது. அதே போல் காய்கறிகள் அதாவது பச்சை பட்டாணி கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.200 ஆகவும், கேரட் கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.80 ஆகவும், இஞ்சி ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும், பச்சை மிளகாய் ரூ.40-ல் இருந்து ரூ.100 ஆகவும், பீன்ஸ் ரூ.40-ல் இருந்து ரூ.90 ஆகவும், நூல்கோல் ரூ.30-ல் இருந்து ரூ.65 ஆகவும் உயர்ந்துள்ளது.
பொதுமக்கள் பாதிப்பு
காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவற்றை வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நமது சாம்பாரில் தக்காளி கட்டாயம் இடம் பெற வேண்டும். ஆனால் தக்காளி விலை விண்ணை தொட்டுள்ளதால், மக்கள் அதை வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். விலை குறையும் வரை காய்கறிகளை சாப்பிடுவதை கைவிடும் நிலைக்கு சாமானிய, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், "தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் பெய்யாமல் உள்ளது. இதன் காரணமாக சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து சரிந்துவிட்டது. இந்த சரிவால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்" என்றார்.