மக்களின் வரிப்பணத்தில் மோடி தியானம்... திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

மேற்கு வங்காளத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்கிற பா.ஜனதாவின் அதீத நம்பிக்கை நகைப்புக்குரியது என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.;

Update:2024-06-02 01:27 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரதமர் மோடியின் தியானம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து அபிஷேக் பானர்ஜி கூறுகையில், "நீங்கள், நான் மற்றும் அனைவரும் தியானம் செய்யலாம். பிரச்சினை இல்லை. அது ஒருவரின் உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது. ஆனால் தயவு செய்து அதை ஊடக காட்சியாக ஆக்காதீர்கள். முழு ஒளிரும் கேமரா முன்பு தியானத்துக்கு உட்காராதீர்கள். பிரதமர் மோடி மக்களின் வரிப்பணத்தில் தியானம் செய்து அதை ஊடக காட்சியாக மாற்றிவிட்டார்.

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பல வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தேர்தல் கமிஷனால் நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வெற்றியில் அவருக்கு இவ்வளவு நம்பிக்கை இருந்தால், அப்படியொரு நடவடிக்கை ஏன்?. மேற்கு வங்காளத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்கிற பா.ஜனதாவின் அதீத நம்பிக்கை நகைப்புக்குரியது. கடந்த 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற 33 தொகுதிகளில் 22 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே தாண்டிவிட்டது.

மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்க அச்சுறுத்துகின்றனர். ஜனநாயக கொள்கைகளை அவர்கள் புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்