'காளி' மாமிசம் உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் கடவுள் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.

இந்து மத கடவுள் ‘காளி’ மாமிசம் உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் கடவுள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-07-07 00:59 IST

கொல்கத்தா,

தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாக கொண்டவர் லீனா மணிமேகலை. இவர் தமிழில் பல்வேறு ஆவண படங்கள், குறும்படங்களை இயக்கியுள்ளார். இவர் எழுத்தாளராகவும், கவிஞராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்பட்டிப்பு படித்து வருகிறார்.

இதற்கிடையில் கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின் கீழ், இந்து மத கடவுள் காளி குறித்து லீனா மணிமேகலை ஆவண படம் ஒன்றை தயாரித்துள்ளார். இந்த ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

இதில், இந்து மத கடவுள் காளி வேடமணிந்த பெண் சிகிரெட் புகைப்பது போன்றும், ஓரின சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது இந்து மத கடவுளை அவமதிக்கும் செயல் என எதிர்ப்பு கிளம்பியது.

இந்த ஆவண படத்தை வெளியிடக்கூடாது என கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்திற்கும், கனட அரசுக்கும் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கனடா எடுத்துள்ளது.

இந்து மத கடவுள் காளி குறித்து லீனா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கும், அந்த ஆவண படத்திற்கும் இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லீனா மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்து மத கடவுள் காளி வேடமணிந்த பெண் புகைபிடிப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் வெளியிடப்பட்ட புகைப்படம் குறித்து , லீனா எடுத்துள்ள ஆவண படம் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தெரிவித்த கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் கூறுகையில், என்னை பொறுத்தவரை கடவுள் காளி மாமிசம் உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் கடவுள். தரப்பித் பகுதியில் உள்ள சக்தி வழிபாட்டு தலத்திற்கு சென்றீர்களானால் சாமியார்கள் புகைப்பிடிப்பார்கள். இது அங்குள்ள மக்கள் கடவுள் காளியை வழிபடும் முறை. நான் இந்து மதத்தவராக இருப்பதாலும், கடவுள் காளியின் பக்தராக இருப்பதாலும் கடவுள் காளியை இவ்வாறு உருவக படுத்த எனக்கு உரிமை உள்ளது. அது எனது சுதந்திரம்.

உங்கள் கடவுளை சைவம், வெள்ளை உடையணிந்தவராக வழிபட உங்களுக்கு சுதந்திரம் உள்ளபோது மாமிசம் உண்ணும் கடவுளை வழிபட எனக்கு உரிமை உள்ளது' என்றார்.

எம்.பி. மஹூவா மொய்த்ராவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்