தியேட்டரில் வேறொரு நபரை பார்த்து சிரித்த மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவருக்கு ஆயுள்

தியேட்டரில் வேறொரு நபரை பார்த்து சிரித்ததால் மனைவியை அடித்துக்கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-26 06:29 GMT

திருவனந்தபுரம்,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவரது மனைவி கனியம்மாள் (வயது 38). இந்த தம்பதிக்கு மணிகண்டன், கணேசன் என 2 மகன்கள் உள்ளனர்.

மாரியப்பன் தனது குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் முக்கோளக்கல் பகுதியில் வசித்துவந்தார். அதேவேளை, மாரியப்பனுக்கும் அவரது மனைவி கனியம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23 கணவன் மனைவி இணைந்து தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றுள்ளனர். அப்போது, தியேட்டரில் வைத்து வேறொரு ஆண் நபரை பார்த்து கனியம்மாள் சிரித்துள்ளார். இதை அவரது கணவர் மாரியப்பன் பார்த்துள்ளார்.

சினிமா பார்த்துவிட்டு இருவரும் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். தியேட்டரில் வேறொரு ஆண் நபரை பார்த்து சிரித்தது தொடர்பாக கனியம்மாளை அவரது கணவன் மாரியப்பன் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த சுத்தியலால் கனியம்மாளை மாரியப்பன் அடித்துக்கொலை செய்துள்ளார். மனைவியை அடித்துக்கொன்ற மாரியப்பன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.

பீட்சா டெலிவரி வேலை செய்யும் கனியம்மாவின் மகன் மணிகண்டன் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தனது தாயார் கனியம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த கனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான மாரியப்பனை தேடி வந்தனர். 3 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் மனைவியை கொலை செய்துவிட்டு திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த மாரியப்பனை கேரள போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் கேரள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவனந்தபுரம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் வெறோரு நபருடன் தொடர்பு இருக்கும் என சந்தேகம் காரணமாக மனைவியை மாரியப்பன் சுத்தியலால் அடித்துக்கொலை செய்தது உறுதியானது.

குற்றம் உறுதியானதையடுத்து, மனைவியை கொலை செய்த மாரியப்பனுக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் ,50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து குற்றவாளி மாரியப்பன் சிறையில் அடைக்கப்பட்டார்.     

Tags:    

மேலும் செய்திகள்