எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இல்லை; பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பேட்டி
எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பா.ஜனதாவில் குழப்பம் இல்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.;
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிா்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பா.ஜனதாவில் எந்த குழப்பமும் இல்லை. எதிர்க்கட்சி தலைவரை கட்சியின் ேமலிடம் அறிவிக்கும். 62 பா..ஜனதா எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி உடையவர்கள் தான்.
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஜெயின் மத துறவி கொலை, பெங்களூருவில் ஐ.டி. நிறுவன அதிபர் கொலை, பா.ஜனதா தொண்டர்கள் கொலை என ஒன்றரை மாதத்தில் பல கொலைகள் நடந்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர்.
கொலை சம்பவங்களை அரசு எளிதாக எடுத்து கொள்கிறது. கொலை சம்பவங்களில் அனைத்து விசாரணைகளும் வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் அரசு அதிகாரிகள் இடமாற்றத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. ஒவ்வொரு இடமாற்றத்துக்கும் விகிதம் அடிப்படையில் பணம் கைமாறுகிறது. முதல்-மந்திரிக்கும், துணை முதல்-மந்திரிக்கும் இடையே தெளிவான உறவு இல்லை.
விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தவறிவிட்டது. எடியூரப்பா ஆட்சியில் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அறிவித்த ரூ.4,000 உதவி தொகையை அரசு திரும்ப பெற்றுள்ளது.
பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தபோது வளர்ச்சி பணிகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் அரசு அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
பாட புத்தகங்களில் உள்ள தலைவர்களின் வரலாற்றை நீக்குவது, மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டங்களை ரத்து செய்வது போன்ற வெறுப்பு அரசியலில் காங்கிரஸ் அரசு ஈடுபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.