5 ஆயிரம் கார்கள் திருட்டு, கொலை, 3 மனைவிகள்... ஆட்டோ தொழிலாளியின் பகீர் பின்னணி

டெல்லியில் ஆட்டோ தொழிலாளி ஒருவர் 5 ஆயிரம் கார்களை திருடி விற்று டெல்லி, மும்பையில் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளார்.

Update: 2022-09-05 15:25 GMT

Image courtesy:  ndtv

புதுடெல்லி,



டெல்லி கான்பூர் பகுதியில் சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளியாக இருந்து வருபவர் அனில் சவுகான். அவருக்கு வயது 52. கடந்த 1995-ம் ஆண்டு முதல் அவர் கார்களை திருட தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கார்களை திருடி, விற்று லாபம் சேர்த்துள்ளார்.

அதன்பின்னர், இதனை ஒரு தொழிலாகவே ஆக்கி கொண்டார். இந்த காலகட்டத்தில் அவரது பேவரைட் காராக மாருதி 800 ரக கார் இருந்துள்ளது. இந்த வகை கார்களையே அதிக அளவில் திருடி விற்றுள்ளார். சில சமயங்களில் திருட்டில் ஈடுபடும்போது, கார் ஓட்டுனர்களை படுகொலையும் செய்துள்ளார்.

இப்படி திருடிய கார்களை நேபாளம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நல்ல விலைக்கு விற்றுள்ளார். அந்த தொகையை கொண்டு டெல்லி, மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரிய, பெரிய சொத்துகளை வாங்கி குவித்து உள்ளார்.

27 ஆண்டுகளாக இந்த கார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு சலிப்படைந்த அனில், இறுதியாக அசாமுக்கு சென்று தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இவருக்கு எதிராக அமலாக்க துறை பணமோசடி வழக்கு ஒன்றையும் பதிவு செய்து உள்ளது என்றால் இவரை பற்றி கூற வேண்டியதில்லை.

பல முறை போலீசார் இவரை கைது செய்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுடன் கைது செய்யப்பட்ட அனில், 5 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின்பு 2020-ம் ஆண்டில் விடுதலையானார்.

சமீப காலங்களாக அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இருந்து ஆயுதங்களை கடத்தி சென்று, அவற்றை வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு விற்று வந்துள்ளார்.

அனிலுக்கு எதிராக 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கிடைத்த உளவு தகவலை அடிப்படையாக கொண்டு, தேசபந்து குப்தா சாலையில் வைத்து மத்திய டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் அவரை பிடித்தனர். நாட்டின் மிக பெரிய கார் திருடன் என அனிலை போலீசார் கூறுகின்றனர்.

அனிலுக்கு 3 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர். அசாமில் தங்கிய அவர், அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்துள்ளார். இதற்காக, உள்ளூர் தலைவர்கள் சிலருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளார். அனிலிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்