கணவரை கொன்று கழிவறை தொட்டியில் புதைத்த மனைவி; ஒரு மாத விசாரணைக்கு பின் கைது

பஞ்சாப்பில் கணவரை கொன்று, 30 அடி ஆழ கழிவறை தொட்டியில் புதைத்த மனைவி ஒரு மாத விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-27 02:27 GMT



சங்ரூர்,


பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தில் பக்சிவாலா கிராமத்தில் வசித்து வருபவர் ஜஸ்வீர் கவுர். இவர், தனது கணவர் காலாசிங் காணாமல் போய் விட்டார் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதில், கணவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி போன நிலையில், போலீசாரின் கவனம் கவுரின் மீது திரும்பியுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து உள்ளனர்.

இதில், அவர் கணவர் காலாசிங்கை கொலை செய்தது தெரிய வந்தது. கணவரை கொலை செய்து வீட்டில் உள்ள கழிவறை தொட்டியில் புதைத்ததும் விசாரணையில் தெரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார், வீட்டில் உள்ள காலாசிங்கின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கழிவறைக்காக 25 முதல் 30 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு உள்ளது. அதில், கணவரின் உடலை புதைத்து மண்ணை போட்டு கவுர் மூடியுள்ளார்.

இதுபற்றி காவல் நிலையத்தின் உயரதிகாரி மெஹர் சிங் கூறும்போது, ஒரு மாதத்திற்கு முன்பு கணவரை காணவில்லை என புகார் வந்த நிலையில், தீவிர விசாரணையில் காலாசிங்கை கொன்று, வீட்டின் கழிவறையில் மனைவி புதைத்தது தெரிய வந்தது.

உடலை வெளியே எடுக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என விசாரித்து வருகிறோம். அப்படி இருக்குமென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளர்.

காலாசிங்கின் சகோதரி பிங்கி கூறும்போது, எனது சகோதரருக்கு நீதி வேண்டும். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்