வீடு புகுந்து முதியவர் அடித்துக் கொலை

பெங்களூருவில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை வீடு புகுந்து அடித்துக் கொலை செய்த சமபவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-12-12 21:10 GMT

ஹெண்ணூர்:-

முதியவர் கொலை

பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் குப்பண்ணா (வயது 72). இவர், வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலையில் குப்பண்ணாவின் வீட்டுக்குள் புகுந்த சிலர், அவரை கண்மூடித்தனமாக அடித்தார்கள். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதுபற்றி ஹெண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து குப்பண்ணாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தார்கள். அப்போது மது, சகபாஸ் உள்பட 3 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

சிறுமி பலாத்காரத்தால் ஆத்திரம்

அதாவது மது, சகாபாஸ், குப்பண்ணாவின் வீட்டின் அருகே வசித்து வருகிறார்கள். குப்பண்ணா வீட்டையொட்டியே ஒரு சிறுமி வசித்து வருகிறாள். அந்த சிறுமி வீட்டு மாடியில் உலர போட்டு இருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றிருந்தாள். அந்த சந்தர்ப்பத்தில் சிறுமியிடம் நைசாக பேசிய குப்பண்ணா, அவளுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தில் அவர் மயக்க மருந்து கலந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மயக்கம் அடைந்த சிறுமியை குப்பண்ணா பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் குப்பண்ணாவின் வீடுபுகுந்து, அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான 3 பேர் மீதும் ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்