எதிர்க்கட்சி தலைவரை பா.ஜனதா மேலிடம் முடிவு செய்யும்; முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

எதிர்க்கட்சி தலைவரை பா.ஜனதா மேலிடம் முடிவு செய்யும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-05-28 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்வி குறித்து முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெண்களின் வாக்குகள்

கர்நாடகத்தின் வளர்ச்சி, எதிர்காலம் ஆகிய விஷயங்கள் மீது தான் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வாக்காளர்களில் பெரும் பகுதியினர், காங்கிரசின் இலவச அறிவிப்புகளால் ஈர்க்கப்பட்டனர். இது இலவசங்களை கொண்ட தேர்தல் என்று கூட சொல்லலாம். இலவசங்களால் பெண்களின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்துள்ளன.

மேலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 6 சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு சென்றுவிட்டது. அதனால் தான் காங்கிரசுக்கு இத்தகைய பெரிய வெற்றி கிடைத்தது. நான் என்னால் முடிந்தவரை நல்லாட்சி நிர்வாகத்தை நடத்தினேன். மோசமான நிலையில் இருந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு வந்தேன். விவசாயிகள், இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் நல்ல திட்டங்களை அமல்படுத்தினேன்.

இலவச அறிவிப்புகள்

நாங்கள் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தினாலும், காங்கிரசின் இலவச அறிவிப்புகள் மீது மக்கள் கவனம் செலுத்தினர். காங்கிரசை போல் பா.ஜனதாவும் முன்கூட்டியே தேர்தல் ஏற்பாடுகளை தொடங்கி இருக்க வேண்டும். அதில் நாங்கள் சற்று பின்தங்கிவிட்டோம். நாங்கள் எங்களின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனியார் நிறுவனங்கள் மூலம் உத்தரவாத அட்டைகளை காங்கிரசார் வழங்கினர். இதை மக்கள் நம்பிவிட்டனர். எங்கள் கட்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட வலுவான தலைவர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாங்கள் செயல்படுவோம். எடியூரப்பா உள்பட எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் வருகிற ஜூன் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்குவார்கள்.

துடிப்பான எதிர்க்கட்சி

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள். இது தவறு. கடந்த கால தேர்தல் முடிவுகளை பாா்த்தால், அவர்கள் சொல்வது தவறு என்பது புரியும். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை மக்கள் வெவ்வேறாக பார்க்கிறார்கள். சட்டசபையில் பா.ஜனதா வலுவான, துடிப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்.

ஆட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் என்ன செய்யும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் இறுதி வரை கொண்டு செல்வோம். நாங்கள் மக்களின் குரலாக செயல்படுவோம். எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை பா.ஜனதா மேலிடம் முடிவு செய்யும். கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்