தொழில்அதிபர், மகனை கடத்தி ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல்
நஞ்சன்கூடுவில் தொழில்அதிபர் மற்றும் அவரது மகனை கடத்தி ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய மர்மநபர்கள், போலீசாரின் தேடுதல் வேட்டையால் பயந்துபோய் அவர்களை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
மைசூரு:-
தொழில்அதிபர், மகன் கடத்தல்
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா அடக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தீபக். தொழில்அதிபர். இவரது மகன் ஹர்ஷா. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தீபக் தனது மகனுடன் தனது தொழிற்சாலைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்மநபர்கள், தொழில்அதிபர் மற்றும் அவரது மகனை காருடன் அங்கிருந்து கடத்தி ெசன்றனர்.
பின்னர், அவர்கள் தீபக்கின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணத்தை கொடுக்காவிட்டால் தீபக்கையும், ஹர்ஷாவையும் கொலை செய்து விடுவதாகவும் கூறி உள்ளனர். இதனால் அதி்ாச்சி அடைந்த தீபக்கின் குடும்பத்தினர், நஞ்சன்கூடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் தேடுதல் வேட்டை
இதையடுத்து நஞ்சன்கூடு போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக இறங்கினர். பல்வேறு பகுதிகளில் சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் தீபக்கின் கார் நின்று கொண்டிருந்தது.
இதற்கிடையே இரவு 10.30 மணி அளவில் பன்னூர் பகுதியில் தீபக்கையும், அவரது மகன் ஹர்ஷாவையும் இறக்கிவிட்டுவிட்டு மர்மநபர்கள் காரை சாமுண்டி மலை அடிவாரத்தில் விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் நஞ்சன்கூடு புறநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறினர்.
வலைவீச்சு
அப்போது தான் போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பயந்து மர்மநபர்கள், தொழில்அதிபரையும், அவரது மகனையும் விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நஞ்சன்கூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நஞ்சன்கூட்டில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.