தத்தா குகைக்கோவில் பூஜை முறையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
தத்தா குகைக்கோவிலில் பூஜை செய்யும் முறையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு கூறியுள்ளது.;
பெங்களூரு: தத்தா குகைக்கோவிலில் பூஜை செய்யும் முறையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு கூறியுள்ளது.
அர்ச்சகரை நியமிக்க முடிவு
சிக்கமகளூரு அருகே சந்திரதிரிகோணமலையில் தத்தா குகைக்கோவில் உள்ளது. தத்தாவின் பாதம் உள்ள இந்த கோவிலில் இந்து, முஸ்லிம் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால் தத்தா குகைக்கோவிலை இந்துக்களின் பீடமாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தத்தா குகைக்கோவில் விவகாரத்தில் அரசே முடிவு எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு கூறி இருந்தது. இந்த நிலையில் தத்தா குகைக்கோவில் விவகாரம் தொடர்பாக ஜூலை மாதம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இருமத மரபுபடி பூஜைகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் முஜாவருடன், அர்ச்சகர் ஒருவரையும் நியமிக்கவும் அரசு முடிவு செய்தது.
தற்போதைய நிலை
இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சையது கவுஸ் முகைதீன் என்பவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நேற்று ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது அரசு, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தத்தா குகைக்கோவிலில் பூஜை செய்யும் விவகாரத்தில் அடுத்த உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கூறினார். மேலும் மனு மீதான விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.