மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது - சோனியா காந்தி

மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-21 14:32 GMT

புதுடெல்லி,

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன .

சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர். மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குறைகூறி வருகிறது.

இந்த நிலையில் மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

மணிப்பூரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்ற இந்த கலவரத்தில் ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் மணிப்பூர் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலையை பார்த்து வருத்தப்படுகிறேன். 

சொந்த மண்ணில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டது நீங்காத காயமாக உருவாகி உள்ளது. தமது குழந்தைகளுக்கு தேவையான எதிர்காலத்தை அமைதியான முறையில் அமைத்துக்கொடுப்பதற்கான வழிகள் நமது தேர்வாக இருக்க வேண்டும்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மணிப்பூர் மக்கள் மீது எனக்கு நம்பிக்கையும் உள்ளது, இந்த சோதனையை நாம் ஒன்றாக சமாளிப்போம்.என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்