எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Update: 2022-07-26 00:19 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. புகார் கூறியது.

மேலும் இதுதொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமும் மேல்முறையீடு செய்தது. எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.

இன்று விசாரணை

இதற்கிடையே தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் ஆஜராகி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, 'எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என முறையிட்டார்.

இந்த முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்