எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க - சித்தராமையா குற்றச்சாட்டு

ஜனநாயகத்திற்கு ஆபரேஷன் தாமரை எதிரானது என தெரிந்தும் எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா விலைக்கு வாங்குவதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.

Update: 2022-06-27 22:13 GMT

பெங்களுரூ,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜனநாயகத்தை காப்பாற்றுவதாக பா.ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் மராட்டிய மாநிலத்தில் அக்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது?. நெருக்கடி நிலையை அமல்படுத்தியது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர்கள் குறை சொல்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் இப்போது செய்து கொண்டிருப்பது என்ன?. மத்திய பிரதேசம், கர்நாடகத்தில் இருந்த அரசுகளை சட்டவிரோதமாக செயல்பட்டு கவிழ்த்தது யார்?.

ஆபரேஷன் தாமரையை ஆரம்பித்தது யார்?. இந்த ஆபரேஷன் தாமரை மூலம் விலைக்கு வாங்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.30 கோடி பணம் கொடுக்கப்படுகிறது. இதற்கு பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?. பா.ஜனதாவிடம் ஆட்சி அதிகாரம் மற்றும் பணம் ஆகிய இரண்டும் இருப்பதால் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்கிறார்கள்.

ஜனநாயகத்திற்கு ஆபரேஷன் தாமரை எதிரானது என்று தெரிந்தும், பா.ஜனதா பாவத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறது. கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சியை பிடிக்க முடியாது. நடந்து முடிந்த மேல்-சபை தேர்தலில் அக்கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?.

நானே அடுத்த முதல்-மந்திரி என்று குமாரசாமி சொல்கிறார். மக்களின் ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்கள் தான் முதல்-மந்திரி ஆக முடியும். என்னை கண்டாலே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு பயம். அதனால் தான் எனக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்