அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே நோக்கம் - தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் பணி செய்ததை என்னால் மறக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2024-03-19 13:16 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

புதுச்சேரி மக்களின் அன்புக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் அபரிமிதமான அன்பினை என் மீது பொழிந்தார்கள். இந்த அன்பு தொடரும். புதுச்சேரி மக்களுக்கு சில நேரங்களில் கடுமையான முடிவுகளை எடுத்து சேவை செய்தேன். இந்த வாய்ப்பினை கொடுத்த பிரதமர், உள்துறை மந்திரி, ஜனாதிபதிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரியில் பணி செய்ததை என்னால் மறக்க முடியாது. நல்ல திட்டங்களை செயல்படுத்த மனசாட்சிப்படி பணி செய்தேன். 3 மாத பொறுப்பு என்று கூறி எனக்கு 3 வருடங்கள் வாய்ப்பு கொடுத்தனர். இதற்கான ஆண்டவனையும், ஆள்பவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். தமிழில் பதவிப்பிரமாணம், கவர்னர் உரையை வாசித்தேன்.

இப்போது மக்கள் பணி செய்ய முழுமனதோடு ராஜினாமா செய்துள்ளேன். இது நானாக எடுத்த முடிவு. என்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. தெலுங்கானாவில் 300 ஊழியர்கள் என்னை அழுதுகொண்டே வழியனுப்பினார்கள். இன்னும் 6 மாத காலம் பதவி உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இது சுயநல முடிவு அல்ல. அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் இதற்கு காரணம்.

வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு செல்கிறேன். புதுவை மக்கள் என்மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். புதுவைக்கு வரும் காலத்தில் வரும் முதல்-அமைச்சர், கவர்னர்களிடம் செய்ய வேண்டியவற்றை நான் கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்