தியேட்டரில் ஏற்பட்ட தகராறில் பயங்கரம்; 2 தொழிலாளிகளை தாக்கி கொல்ல முயற்சி
சிக்கமகளூரு அருகே தியேட்டரில் ஏற்பட்ட தகராறில் 2 தொழிலாளிகளை தாக்கி கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
தியேட்டரில் தகராறு
கர்நாடக மாநிலத்தில் காந்தாரா என்னும் கன்னட திரைப்படம் தற்போது வெளியாகி அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக உடுப்பி மாவட்டத்தை ேசர்ந்த தொழிலாளிகளான அசோக் பண்டாரி மற்றும் கோபாலா என்பவர்கள் குடும்பத்துடன் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் உள்ள தியேட்டருக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவா்கள் குடும்பத்துடன் படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபர்கள் 4 பேர், படம் பார்க்கவிடாமல் அதிகப்படியான சத்தத்துடன் விசில் அடித்து கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அசோக், அவர்கள் 4 பேரையும் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
சரமாரி தாக்குதல்
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் படம் முடிந்து வெளியே வந்த அசோக் மற்றும் கோபாலாவிடம் அந்த வாலிபர்கள் மீண்டும் தகராறு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர்கள் 4 பேரும் சேர்ந்து அசோக்கையும், கோபாலாவையும் சரமாாியாக தாக்கி உள்ளனர்.
மேலும் அங்கு கிடந்த கற்களை எடுத்து அடித்து காயப்படுத்தி உள்ளனர். இதில் அவர்களை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் அசோக் மற்றும் கோபாலா படுகாயம் அடைந்தனர்.
4 பேருக்கு வலைவீச்சு
அவா்களை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர்களது குடும்பத்தினர் கொப்பா போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டரில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி பார்வையிட்டனர். அதில் அந்த வாலிபர்கள் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.