பொது சேவை மையங்களில் காணொலி அல்லது தொலைபேசி வழி சட்ட சேவை இலவசமாக வழங்கப்படும் - மந்திரி கிரண் ரிஜிஜு

தொலைதூர சட்ட சேவை இந்த ஆண்டிலிருந்து குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

Update: 2022-07-16 13:44 GMT

ஜெய்ப்பூர்,

தொலைதூர சட்ட சேவை இந்த ஆண்டிலிருந்து குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 18வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசுகையில், "இந்த ஆண்டு முதல், தொலைதூர சட்ட சேவை குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்" என்று தெரவித்தார்.

இந்த நிகழ்வின் போது, நீதித்துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவை இணைந்து, சட்ட சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டன.

பொது சேவை மையங்களில் இருந்து கொண்டு, வீடியோ காணொலி அல்லது தொலைபேசி உள்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர்களை தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விளிம்புநிலை மக்கள் சட்ட உதவி பெறமுடியும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் 700 வழக்கறிஞர்களின் சேவைகளை இத்திட்டத்தின் கீழ் பிரத்தியேகமாக ஆணையம் வழங்கும். இந்த வழக்கறிஞர்கள், இப்போது பரிந்துரை வழக்கறிஞர்களாகவும் செயல்படுவார்கள்.

மேலும் வழக்குக்கு முந்தைய கட்டத்தில், தகராறு தவிர்ப்பு மற்றும் தகராறு தீர்வுக்கான பொறிமுறையை வலுப்படுத்தவும் உதவுவார்கள்.

எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக, தொலைபேசி சட்ட செயலி 2021இல் தொடங்கப்பட்டது. இது தற்போது 22 மொழிகளில் கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் புரட்சியின் பயனாக, தொலைதூர சட்ட சேவைகள் வெறும் ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பயனாளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம், 1 கோடி பேர் பயனடைவார்கள் என்று கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்