நீதிமன்றத்தில் ஆஜர்: சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுக்க போலீஸ் தீவிரம்

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2023-09-10 01:14 GMT

அமராவதி,

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார்.

இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக மாநில குற்ற புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வகையில் பஸ்சில் ஊர் ஊராக யாத்திரை சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் சந்திரபாபு நாயுடு, நேற்று முன்தினம் இரவு நந்தியாலா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அதன் பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அருகே பஸ்சை நிறுத்தி, அதிலேயே உறங்க சென்றார். அப்போது அங்கு வந்த நந்தியாலா போலீசார் நேற்று அதிகாலை 6 மணயளவில் சந்திரபாபு நாயுடுவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் (கஸ்டடி) எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்