'வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள்' - காங்கிரஸ் குறித்து அசாம் முதல்-மந்திரி விமர்சனம்

வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.

Update: 2024-03-30 07:41 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரஒ 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக சுமார் ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் தங்கள் வங்கிக் கணக்கை பா.ஜ.க. அரசு முடக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது வருமான வரித்துறையினர் காங்கிரஸ் கட்சிக்கு அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கட்சியை திவாலாக்க பா.ஜ.க. அரசு முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பா.ஜ.க. அரசின் வரி பயங்கரவாதத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசுக்கு வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள் என அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரிப்பணம் என்பது பொதுமக்களின் நலனுக்காக செலவிடப்படுகிறது. அரசுக்கு வரி செலுத்த மறுப்பவர்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மறுக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி வரி செலுத்த மறுக்கிறது என்றால், அவர்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று அர்த்தம்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்