வானில் தோன்றிய அரிய நிகழ்வு; பல்வேறு நகரங்களில் சூரிய கிரகணத்தை கண்டுகளித்த மக்கள்- புகைபடங்கள்
இந்தியாவில் மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடிந்தது.
புதுடெல்லி
இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெரிய உள்ளது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்படும்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவாகும். உலக அளவில் இன்று மதியம் 2.19 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில் தெரிந்தது.
ரஷியாவின் மத்திய பகுதியில் 80 சதவீதம் வரை சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் தவிர நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு கண்ணாடி மூலம் சூரியகிரணத்தை கண்டுகளித்தார்.
இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணிக்கு கிரகணம் தெரியத் தொடங்கியது. 5.44 மணி வரை தெரியும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடிந்தது. அதிக நேரம் இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்ட்டது.
அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்பட்டது.
இதுதவிர மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்ப்பூர் இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெய்ன், மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக சூரிய கிரகணம் தென்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரிந்தது
இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பார்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கிரகணத்தை பார்த்தனர். சூரிய கிரகணம் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் நடை மூடப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.