தேர்தல் பத்திரங்கள் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாரத ஸ்டேட் வங்கி கேட்ட கூடுதல் அவகாசமும் மறுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம், தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்களை பெற்றவர்களின் விவரங்களை அளித்தது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று பொதுவெளியில் பகிர்ந்தது.
ஸ்டேட் வங்கி அளித்துள்ள தகவல்களின்படி கிராசிம் இன்டஸ்ட்ரீஸ், மேகா என்ஜினீயரிங், பிரமல் என்டர்பிரைசஸ், டோரன்ட் பவர், பாரதி ஏர்டெல், டி.எல்.எப். டெவலப்பர்ஸ், வேதாந்தா லிமிடெட், அப்பல்லோ டயர்ஸ், லட்சுமி மிட்டல், பி.வி.ஆர்., ஈடில்வெயிஸ், கெவன்டர், சுலா ஒயின், வேல்ஸ்பன், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளன. பா.ஜனதா, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பாரத ராஷ்டிர சமிதி, சிவசேனா, தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி போன்ற கட்சிகள் அவற்றை பணமாக்கி உள்ளன.
தேதி வாரியாக எந்தெந்த நிறுவனங்கள் தனிநபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் எந்தெந்த தேதியில் பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் ரொக்கமாக மாற்றினார்கள் என்ற விவரங்கள் மட்டுமே நேற்று பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மற்றபடி தேர்தல் பத்திர எண், யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நடைபெறுகிறது. தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது.