டோனி தொடர்ந்த வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரியின் சிறை தண்டனைக்கு தடை நீட்டிப்பு
கிரிக்கெட் வீரர் டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு விதித்த 15 நாட்கள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடையை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்தது.;
புதுடெல்லி,
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி டோனி 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளை பதிவு செய்து அந்த பதில் மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுக்களில் உள்ள தகவல்கள் நீதிமன்றத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக டோனி சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் சம்பத்குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க கிரிக்கெட் வீரர் டோனிக்கு உத்தரவிட்டது. இதனிடையே நேற்று மீண்டும் நடைபெற்ற விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் மேல்முறையீடு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டது.