ஹிஜாப் தடை விவகாரம்: மேல்முறையீட்டு மனுக்களை 3 நீதிபதிகள் அமர்வு அவசரமாக விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்
ஹிஜாப் தடை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை 3 நீதிபதிகள் அமர்வு அவசரமாக விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை 3 நீதிபதிகள் அமர்வு அவசரமாக விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
மாறுபட்ட தீர்ப்பு
பள்ளி - கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, அரசின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 12-ந்தேதி கூறியது மேலும் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அவசரமாக விசாரணை
இந்த மேல்முறையீட்டு மனுக்களை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா ஆஜராகி கோரிக்கை விடுத்தார். அப்போது அவர், 'அரசு கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வுகளை முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத வேண்டி உள்ளது.
செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 6-ந் தேதி தொடங்க உள்ளது. எனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதால் அவசரமாக வழக்கை விசாரிக்க வேண்டும்' என்று முறையிட்டார். இந்த முறையீடு குறித்து பரிசீலித்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.