உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தாக்கல் செய்த பொதுநல மனு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் சார்பில், மருத்துவ கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.

Update: 2022-08-27 00:25 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

உக்ரைனில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு, போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்களான பஞ்சாபை சேர்ந்த அர்ச்சிதா உள்ளிட்ட 7 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில் மருத்துவக் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி கோரி இருந்தனர். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, மருத்துவக் கல்வியை நிறைவு செய்யாமல் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியாவில் மருத்துவ கல்வி பயில போதுமான உட்கட்டமைப்பு வசதி உள்ளதா? என கேள்வி எழுப்பியது.

இதற்கு மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்தியாவில் தங்கி மருத்துவக் கல்வியை நிறைவு செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். பிற நாடுகளில் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளபோது நமது நாட்டிலும் செய்ய வேண்டும் என வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்