நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை - தலைவன் உள்பட 2 பேர் கைது

கும்பலிடம் இருந்து உயர்ரக போதைப்பொருட்களை வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.

Update: 2024-06-08 03:46 GMT

பெரும்பாவூர்,

கேரள மாநிலம் திருச்சூர் அருகே புழைக்கல் பாடம் பகுதியில் காரில் போதை பொருள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் இருந்து 330 கிராம் உயர்ரக எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என தெரிகிறது.

போதைப்பொருளை கடத்தி வந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த நஜீப் (வயது 26), குருவாயூரை சேர்ந்த ஜிதேஷ் குமார்(28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் விக்கிஸ் கேங்க் என்ற கும்பல் குறித்த தகவல் கிடைத்தது. இந்த கும்பல் தென்னிந்தியா முழுவதும் உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதை அறிந்த கர்நாடகாவை சேர்ந்த கும்பல் தலைவன் விக்ரம் (26), குருவாயூரை சேர்ந்த முகமது ரியாஸ் (35) ஆகிய 2 பேரும் தலைமறைவாகினர். பின்னர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் முகமது ரியாஸ் போதைப்பொருட்களை நட்சத்திர விடுதிகள், டி.ஜே. பார்ட்டிகள், ஓட்டல்கள், கொச்சியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள், நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. தலைமறைவான அவர்களை, கடும் முயற்சி மேற்கொண்டு 2,500 கி.மீ. தூரம் பிற மாநிலங்களுக்கு சென்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பலிடம் இருந்து உயர்ரக போதைப்பொருட்களை வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்