சுகேஷ் சந்திரசேகரை வேறு சிறைக்கு மாற்றலாம்-சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை யோசனை

நீதிபதிகள் அமலாக்கத்துறை யோசனைக்கு பதிலளிக்க சுகேஷ் சந்திரசேகருக்கு உத்தரவிட்டு, வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Update: 2022-06-24 01:41 GMT

புதுடெல்லி,-

திகார் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சுகேஷ் சந்திரசேகர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.வசந்த், மனுதாரருக்கு எதிரான பெரும்பாலான வழக்குகள் பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. திகார் சிறையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மனுதாரரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, திகார் சிறையில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் மனுதாரர் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எவ்விதமான அச்சுறுத்தலும், காயமும் இல்லை என்ற மருத்துவ அறிக்கை உள்ளது.

எனவே, மனுதாரரை மாற்றும் பட்சத்தில் திகார் சிறையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு டெல்லியில் அமைந்துள்ள மண்டோலி சிறைக்கு மாற்றலாம். அங்கு அவருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கப்படும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமலாக்கத்துறை யோசனைக்கு பதிலளிக்க சுகேஷ் சந்திரசேகருக்கு உத்தரவிட்டு, வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்