பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து - 11-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்

பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியரை 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.

Update: 2024-12-13 02:38 GMT

கோப்புப்படம் 

பஹ்ரைச்,

உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஹின்பூர்வாவில் உள்ள நவாயுக் இன்டர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திர பிரசாத். பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்து பயன்படுத்தியுள்ளனர்.

இதைப் பார்த்த ஆசிரியர் ராஜேந்திர பிரசாத் மாணவர்களை கண்டித்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவன் நேற்று ஆசிரியர் வகுப்புக்கு வந்தபோது அவரை கத்தியால் குத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக ஆசிரியரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்