நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று தீர்ப்பு

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Update: 2024-12-13 01:49 GMT

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமியை கொலை செய்திருந்தார். இதுதொடர்பாக பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் தர்ஷனை கைது செய்து பல்லாரி சிறையில் அடைத்தார்கள். சிறையில் முதுகு வலியால் அவதிப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்ள கர்நாடக ஐகோர்ட்டு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, அவர் பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கர்நாடக ஐகோர்ட்டில் நிரந்தர ஜாமீன் கோரியும் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது கடந்த 9-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். அதே நேரத்தில் நேற்று வரை தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.

இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் அறிவிக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனால் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் பல்லாரி சிறைக்கு செல்வாரா? என்பது தீர்ப்புக்கு பிறகே தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்