வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கு; சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் - ப.சிதம்பரம்

வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.;

Update:2024-12-12 21:29 IST

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 1991-ம் வழிபாட்டு தளங்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் எந்த ஒரு மத வழிபாட்டு தலமும் 1947 ஆகஸ்ட் 15-ந்தேதியில் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையிலேயே தொடர வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தின் சில சலுகைகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் உள்ளதால், மசூதிகள் இருக்கும் இடத்தில் கோவில் இருந்ததாக கூறி புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட கூடாது என்றும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்கால உத்தரவோ அல்லது இறுதி உத்தரவோ பிறப்பிக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வழிபாட்டு தலங்களின் தன்மை 15-8-1947 ஆம் நாளில் எப்படி இருந்ததோ, அதே தன்மை என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை நிலை நிறுத்தும் முயற்சியை எல்லோரும் வரவேற்க வேண்டும். இந்த சட்டம் உயரிய நோக்கத்துடன் 1991-ல் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விரைவில் விசாரித்து தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்