காவிரி ஆற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

அண்ணன்-தங்கை உறவுமுறை என குடும்பத்தினர் கண்டித்ததால் காவிரி ஆற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.

Update: 2023-01-07 21:30 GMT

மைசூரு:

அண்ணன்-தங்கை உறவுமுறை என குடும்பத்தினர் கண்டித்ததால் காவிரி ஆற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.

தற்கொலை

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா பகுதியில் ஒரு பாலத்தில் இருந்து ஒரு ஆணும், பெண்ணும் காவிரி ஆற்றுக்குள் குதித்தனர். இதனை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் அவர்களின் உடல்களையும் மீட்க முடியவில்லை. இதுகுறித்து டி.நரசிப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்பதும், காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. மேலும் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சித்தப்பா மகள்

அதாவது, தற்கொலை செய்து கொண்டவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா இலக்கூரை சேர்ந்தவர் மணி (வயது 30), இவரது சித்தப்பாவின் மகள் மைசூரு டவுன் ரமாபாயியை சேர்ந்தவர் வசந்தா (25) என்பது தெரியவந்தது. வசந்தாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனால் வசந்தா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அண்ணன் முறை கொண்ட மணிக்கும், வசந்தாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுகுறித்து இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடுமாறும், அண்ணன்-தங்கை உறவுமுறையை கூறியும் அறிவுறுத்தி உள்ளனர்.

போலீஸ் விசாரணை

ஆனாலும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து அவர்களை கண்டித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, மணி தனது வீட்டில் மைசூருவுக்கு வேலை விஷயமாக செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வசந்தாவும், மணியும் டி.நரசிப்புரா பகுதியில் உள்ள ஆற்று பாலத்திற்கு வந்துள்ளனர். பின்னர், இருவரும் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து டி.நரசிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்