உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை டோலி கட்டி தூக்கி சென்ற கிராம மக்கள்

சாலை வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை டோலி கட்டி கிராம மக்கள் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

Update: 2022-09-19 18:45 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவில் கண்டேமக்கி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் புறநகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வெங்கம்மா(வயது 86) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவரது வீட்டிற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை என தெரிகிறது. இதுகுறித்து மூதாட்டி பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத நிலை இருந்துள்ளது. இதையடுத்து நேற்றுமுன்தினம் அவருக்கு உடல்நலம் மிகவும் மோசமானது. கண்டேமக்கி கிராமத்தை சோ்ந்த சிலர் ஒன்றுசோ்ந்து மூதாட்டியை டோலி கட்டி தூக்கி சென்று கலசா அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்