மணிப்பூரில் திடீர் வன்முறை: 2 பேர் பலி; போலீசார் குவிப்பு

மணிப்பூரில் ஏற்பட்ட திடீர் வன்முறை சம்பவத்தில் நிருபர், 2 போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

Update: 2024-09-02 03:39 GMT

இம்பால்,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே வன்முறை, மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பல மாதங்களாக அமைதி காணப்பட்ட நிலையில், திடீரென நேற்று வன்முறை ஏற்பட்டு உள்ளது.

மணிப்பூரின் மேற்கு இம்பால் நகரில் கவுடிரக் பகுதியில் குகி பயங்கரவாதிகள் சிலர் கும்பலாக கூடி ராக்கெட்டுடன் கூடிய எறிகுண்டுகளை குவித்தனர். அவர்கள் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆளில்லா விமானங்களின் உதவியுடன் இந்த எறிகுண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளனர்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் சிக்கி பெண் ஒருவர் உள்பட 2 பேர் பலியானார்கள். செய்தி சேகரிக்க சென்ற நிருபர், காவல் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு எதிரான இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பொதுவாக போர் பகுதியிலேயே நடத்தப்படும். இதில் பயிற்சி பெற்ற நபர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அவர்களின் ஆதரவும் உள்ளது என்பது மறுக்க முடியாதது என மணிப்பூர் போலீசின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நேற்று மதியம் 2 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல் இரவு 7.30 மணி வரை நீடித்து உள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து இரவு முழுவதும் பதற்ற நிலையே காணப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் கிராமத்தில் இருந்த வீடுகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதனால், பாதுகாப்பு தேடி மக்கள் வேறு இடங்களுக்கு தப்பியோடினர். இதனை தொடர்ந்து, மணிப்பூர் டி.ஜி.பி. ராஜீவ் சிங், தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வெவ்வேறு பாதுகாப்பு படையினர் இடையே முறையான ஒத்துழைப்புடன் கூடிய, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளன. மணிப்பூரில் பல மாதங்களாக அமைதி காணப்பட்ட நிலையில், இந்த வன்முறை சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்