கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது
காரிய கமிட்டி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 1924-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அந்த மாநாடு நடந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதை நினைவு கூறும் வகையில் மகாத்மா காந்தி நினைவு நூற்றாண்டு காங்கிரஸ் மாநாடு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) பெலகாவியில் நடைபெறுகிறது.
இதையொட்டி பம்ப சரோவர் பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காாிய கமிட்டி உறுப்பினர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள், சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர்கள், மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 3 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கிறார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மற்றும் மாநாட்டில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.