திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற மகன்: பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

திருநங்கைகள் வைத்திருந்த பணத்தை சுனில் குமார் செலவிட்டதாக கூறப்படுகிறது.

Update: 2024-12-26 09:40 GMT

திருப்பதி,

ஆந்திராவில் திருநங்கையை மகன் திருமணம் செய்ய முயன்றதால் பெற்றோர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ப ராயுடு (வயது 45) இவரது மனைவி சரஸ்வதி (வயது 38) இவர்களின் மகன் சுனில் குமார்( வயது 24). இவர் கடந்த 3 ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவரது பெற்றோர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் திருமணம் செய்தால் திருநங்கையைத்தான் மணந்துகொள்வேன் என சுனில் குமார் பிடிவாதமாக கூறி வந்தார். இதனால் அவருக்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுனில் குமார் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் திருநங்கைகள் வைத்திருந்த ரூ.1.5 லட்சத்தை சுனில் குமார் செலவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது பெற்றோரிடம் அந்த தொகையை திரும்ப கேட்டு திருநங்கைகள் தொல்லை கொடுத்துவந்தனர். பொதுவெளியில் திருநங்கைகளால் அவமானப்படுத்தப்பட்டதால் அவர்களின் துயரம் மேலும் அதிகரித்தது.

இதனையடுத்து மனவேதனையில் இருந்த தம்பதியினர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கையை திருமணம் செய்ய முயன்ற மகனால் மனவேதனையடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்