உத்தர பிரதேசம்: பள்ளிக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காக சிறுவனை கொன்ற மாணவன்

பள்ளிக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காக 9 வயது சிறுவனை கொன்ற மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-12-26 15:41 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியருடைய காரில், கடந்த செப்டம்பர் 26-ந்தேதி, அதே பள்ளியில் தங்கி படித்து வந்த 9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பள்ளிக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த சிறுவனை நரபலி கொடுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட பள்ளியில் பயின்று வரும் மாணவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது 13 வயது மாணவன் ஒருவன், பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று சக மாணவர்களிடம் கேட்டு வந்துள்ளான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், குறிப்பிட்ட மாணவனை அழைத்து விசாரணை நடத்தியபோது, கொலைக் குற்றத்தை அந்த மாணவன் ஒப்புக்கொண்டான். இதன்படி சம்பவத்தன்று தங்கள் பள்ளியில் படிக்கும் 9 வயது சிறுவனை டவலை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அந்த மாணவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனை சி.சி.டி.வி. ஆதாரம் மூலம் உறுதி செய்த போலீசார், மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்