முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும்; அரசு தகவல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும்.

Update: 2024-12-26 18:02 GMT

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் இன்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92.

இந்த சூழலில், உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு காலமான மன்மோகன் சிங்கை காண்பதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதுடெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். இதேபோன்று, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டெல்லிக்கு சென்றுள்ளனர். பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் மத்திய சுகாதார மந்திரியான ஜே.பி. நட்டாவும் சென்றுள்ளார். இதனை முன்னிட்டு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் அவருடைய மறைவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் நாளை ரத்து செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், நாளை காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடுகிறது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கர்நாடகாவில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். நாளை (27-ந்தேதி) ஒரு நாள் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது என கர்நாடக முதல்-மந்திரி அலுவலக செய்தி தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்