எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

மறைந்த எழுத்தாளர் வாசுதேவன் நாயர் 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

Update: 2024-12-26 07:35 GMT

திருவனந்தபுரம்,

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், 'ஞானபீடம்' விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் (91) நேற்று இரவு காலமானார். இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள எம்.டி வாசுதேவன், 7 படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு கேரள அரசு இன்றும் நாளையும் (2 நாட்கள்) துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது சித்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று, மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்