ஒரே வர்த்தக முத்திரையில் மானிய விலை உரங்கள்: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த திட்டத்தால் உரங்களின் விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Update: 2022-10-18 00:31 GMT

புதுடெல்லி,

ஒரே வர்த்தக முத்திரை

விவசாயிகளுக்கான மானிய விலை உரங்கள் அனைத்தும் நாடு முழுவதும் ஒரே பெயரில் இருக்கும் வகையில் 'ஒரே நாடு, ஒரே உரம்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

நாடு முழுவதும் மேற்படி உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் 'பாரத்' என்ற ஒரே வர்த்தக முத்திரையில் உரங்களை தயாரிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். டெல்லியில் ேநற்று தொடங்கிய 2 நாள் 'பி.எம். கிசான் சம்மான் சம்மேளனம்' நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

குழப்பங்கள் தீரும்

தற்போது நாட்டில் விற்கப்படும் யூரியா, ஒரே பெயர், ஒரே தரம் மற்றும் ஒரே வர்த்தக முத்திரையுடன் இருக்கும். அதன் பெயர் பாரத் ஆகும். இனிமேல் நாடு முழுவதும் பாரத் வர்த்தக முத்திரையில்தான் யூரியா கிடைக்கும்.

இதன் மூலம் உரங்களின் விலை குறைவதுடன், அவற்றின் தரமும் அதிகரிக்கும். இதன் மூலம் உரங்களின் தரம் மற்றும் இருப்பு குறித்த விவசாயிகளின் அனைத்து விதமான குழப்பங்களும் தீர்ந்து விடும்.

இந்த திட்டத்தின் கீழ் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், என்.பி.கே. என அனைத்து விதமான உரங்களும் ஒரே வர்த்தக முத்திரையுடன் விற்கப்படும்.

இயற்கை விவசாயம்

விவசாயத்தில் தொழில்நுட்பம் சார்ந்த நவீன உத்திகளை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே விவசாயத்தில் புதிய முறைகளை உருவாக்க வேண்டும்.

திறந்த மனதுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சிந்தனையுடன், விவசாயத்தில் அறிவியல் முறைகளை மேம்படுத்துவதுடன், இயற்கை விவசாயத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

குஜராத், இமாசல பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இயற்கை விவசாயத்திற்காக விவசாயிகள் அதிக அளவில் உழைத்து வருகின்றனர். குஜராத்தில் மாவட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவிலும் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கிசான் சம்ருத்தி கேந்திரா

இதைப்போல நாடு முழுவதும் 600 பிரதம மந்திரி கிசான் சம்ருத்தி கேந்திராக்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சில்லறை விலை உரக்கடைகள் இந்த மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

இந்த கேந்திராக்கள் விவசாயிகளின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்யும். குறிப்பாக, உரங்கள், விதைகள், கருவிகள் போன்ற விவசாய உள்ளீடுகள் இங்கு கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் மண், விதைகள் மற்றும் உரங்களுக்கான பரிசோதனை வசதிகளை வழங்கும். அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதுடன், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடும்.

வருகிற நாட்களில் நாடு முழுவதும் உள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான சில்லறை உரக்கடைகளை பிரதான் மந்திரி கிசான் சம்ருத்தி கேந்திராக்களாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Tags:    

மேலும் செய்திகள்