வண்ணப்பொடிகளுக்கு பதிலாக கற்களை வீசி ஹோலி கொண்டாடிய வடமாநிலத்தவர்: 30க்கும் மேற்பட்டோர் காயம்!

வினோதமான முறையில் ஹோலி கொண்டாட்டத்தில் ஒருவொருக்கொருவர் கல் வீசி தாக்கியதில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-08 06:39 GMT

ஜெய்ப்பூர்,

ஹோலி பண்டிகை வட இந்தியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகையாகும். எங்கெல்லாம் வட இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இன்றைய தினம் வண்ணமயமாக இருக்கும்.

ஒருவர் முகத்தில் மற்றொருவர் வண்ணப் பொடிகளை பூசி, ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வர். சென்னையில் தண்டையார்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் ஹோலி பண்டிகை பெரும் திருவிழா போல் காணப்படும்.

பனிக் காலத்திற்கு குட்பை சொல்லிவிட்டு வெயில் காலத்தை வெல்கம் செய்வது தான் ஹோலி பண்டிகை என்றும், தீமையின் மீதான நன்மையின் வெற்றியையும் இந்தப் பண்டிகை குறிக்கிறது என்றும் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன.

விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததை குறிக்கும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும் கிருஷ்ணர், தனது தோழி ராதா மீது வண்ணப் பொடிகளை தூவி விளையாடியதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு காரணமாக இருக்கிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொள்ளும் வினோத ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள் பிலுடா என்ற கிராமத்தில் ஹோலி பண்டிகை தனித்துவமான விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது . நேற்று மாலை, அருகிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வந்து இருந்தனர். பிலுடாவில் உள்ள ரகுநாத்ஜி கோயில் அருகே பிலுடாவில் அனைவரும் ஒன்று கூடினர்.

கிராமங்களின் மக்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஹோலியைக் கொண்டாடும் போது, இரு குழுக்களும் ஒருவருக்கொருவர் கற்களை பொழியத் தொடங்கினர். கற்களை கைகளில் எறிந்துவிட்டு, அதை ஒருவர் மீது ஒருவர் எறிந்து கொண்டனர். பலர் கற்களை கொண்டு அடித்துக்கொண்டனர். இரு கோஷ்டியினர் கற்களை கொண்டு தாக்கும் போது கற்கள் கிராம மக்கள் மீது பறந்தன. அதில் மக்களும் கற்களிலிருந்து தப்பிக்க ஓடினர்.

துங்கர்பூர் அருகே உள்ள பிலுடா கிராமத்தின் மையப்பகுதியில் திரண்ட இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களால் தாக்கியதில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது மாலை வரை நீடித்தது.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கற்களின் காயத்திலிருந்து வெளியே வரும் இரத்தம் தரையில் விழுந்தால், ஆண்டு முழுவதும் கிராமத்தில் அசம்பாவிதமானது ஏதும் நடக்காது எனவும் ஆண்டு முழுவதும் கிராமத்திற்கு செழிப்பு உள்ளது என அந்த கிராம மக்களின் நம்பிக்கை ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்