2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்அகிலேஷ் யாதவ் உறுதி

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

Update: 2023-03-19 17:55 GMT

லக்னோ,

சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிேலஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்காக தத்தமது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணி வடிவம் எடுக்கும். அக்கூட்டணி, பா.ஜனதாவுக்கு எதிராக மோதும். அதில் என்ன பங்கு வகிப்பது என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.

பல மாநிலங்களில் மாநில கட்சிகள்தான், பா.ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றன. அங்கெல்லாம் களத்திலேயே காங்கிரஸ் இல்லை. மாநில கட்சிகள்தான், பா.ஜனதாவுடன் மோதுகின்றன.

பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசையும் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம் போன்ற கட்சிகள் கோருவது உண்மைதான். அக்கட்சிகள் ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளன. இது ஒரு பெரிய போர். இதில் என்ன பங்கு வகிப்பது என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சி கூட்டணியின் முகமாக யார் செயல்படுவது என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அது இப்போது பொருத்தமான கேள்வி அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற வேண்டுமானால், உத்தரபிரதேசத்தில் வெற்றிபெற வேண்டும். ஆனால், உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பா.ஜனதா தோற்பதை சமாஜ்வாடி உறுதி செய்யும். அதற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம். தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

அமேதியில் எங்கள் கட்சி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு காங்கிரசார் ஆதரவாக நிற்பது இல்லை. எங்கள் தொண்டர்களே ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்