பெங்களூரு நகரின் வளர்ச்சி பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தும் மழை பாதிப்பு- பொதுமக்கள் ஆதங்கம்

பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தும் மழை பாதிப்புகளை தடுக்க முடியவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

Update: 2022-09-07 21:56 GMT

பெங்களூரு: பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தும் மழை பாதிப்புகளை தடுக்க முடியவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பெங்களூரு நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்கள் தொகையின் பெருக்கத்திற்கு ஏற்ப பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக பல ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது, போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுவது, சாலை பள்ளங்களை மூடாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருவது ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காகவும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை ஒதுக்கீடு செய்து வருவது தெரியவந்துள்ளது. அதாவது சராசரியாக பெங்களூருவுக்கு என்று ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்படுகிறது.

மக்கள் ஆதங்கம்

ஆனாலும் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரமே வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். சாதாரணமாக மழை பெய்தால் கூட நகரில் பலபகுதிகளில் தண்ணீர் செல்ல முடியாமலும், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெங்களூருவில் மழை பாதிப்பு பெரிய அளவில் ஏற்படுவதற்கு ஏரிகள், ராஜ கால்வாய்கள் ஆக்கிரமிப்பு தான் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூட தெரிவித்துள்ளார். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

அதே நேரத்தில் மாநகராட்சி தேர்தலை கடந்த 2 ஆண்டுகளாக அரசு நடத்தாமல் இருப்பதால், ராஜ கால்வாய் சீரமைப்பு, சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சரியாக நடைபெறாமல் இருப்பதும் மழை பாதிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில் கவுன்சிலர்கள் இருந்தால், தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள் என்று மக்கள் கூறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்