ஊடகங்களிடம் செல்லும்போது... கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி கூறிய அறிவுரை

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் ஐதராபாத் நகரில் இன்று 2-வது நாளாக நடந்தது.

Update: 2023-09-17 11:44 GMT

ஐதராபாத்,

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. அதற்கான அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அக்கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகவுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த கமிட்டியில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த கமிட்டி கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, சச்சின் பைலட், சசி தரூர் எம்.பி. மற்றும் கவுரவ் கோகாய் ஆகியோர் கமிட்டியில் சேர்க்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியில் உயரிய முடிவு எடுக்கும் மற்றும் அதனை அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த கமிட்டி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி மறுசீரமைக்கப்பட்ட பின்னர் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, ஒற்றுமைக்கான செய்தியை கூட்டத்தில் தெரியப்படுத்தினார். இந்தியா கூட்டணியுடன் ஒன்றிணைந்து, பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட வேண்டும் என்று அப்போது கேட்டு கொண்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று 2-வது நாளாக நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாம் தொடர்ந்து அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது. நம்முடைய ஜனநாயகம் காக்கப்பட, நாம் கட்டாயம் ஒன்றிணைந்து இந்த சர்வாதிகார அரசை தூக்கியெறிய வேண்டும் என பேசினார்.

நாம் ஓய்வெடுப்பதற்கான நேரம் இதுவல்ல. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், மக்கள் சந்தித்த சவால்கள் பெருகியுள்ளன. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை பற்றி பேச பிரதமர் மறுக்கிறார். அவரை கடந்து அவரால் பார்க்க முடியவில்லை என்று கார்கே பேசியுள்ளார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, கட்சியின் தலைவர்கள் சுய கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். காங்கிரசின் நலன்களுக்கு தீங்கு ஏற்படுத்த கூடிய விமர்சனங்களுடன் ஊடகங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகளின் பட்டியல் ஒன்றை அக்கட்சி வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்