குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவால் புகைமூட்டம்

ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவால் புகை மூட்டம் ஏற்பட்டது. அந்த வார்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 24 குழந்தைகளை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2023-07-02 21:13 GMT

ஹாசன்:-

ஹாசன் அரசு ஆஸ்பத்திரி

ஹாசன் டவுனில் ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி (ஹிம்ஸ்) அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு வார்டில் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை சிறப்பு பிரிவு (ஐ.சி.யூ.) உள்ளது. அதாவது, எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், உடல் நலக்குறைவால் பிறக்கும் குழந்தைகள் இந்த பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் பிறந்து சில நாட்களே ஆன 24 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தன.

மின்கசிவால் புகைமூட்டம்

இந்த நிலையில் நேற்று காலை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவு காரணமாக அந்த தீவிர சிகிச்சை பிரிவே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கதறி அழுதன. இதனை கேட்டு குழந்தைகளின் பெற்றோர்களும், அங்கு இருந்தவர்களும் பதற்றம் அடைந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றனர்.

24 குழந்தைகள் உயிர் தப்பின

பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த 24 பச்சிளம் குழந்தைகளையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பிறகே பெற்றோரும், அங்கிருந்தவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவும், புகைமூட்டமும் சரி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் 24 பச்சிளம் குழந்தைகளும் உயிர் தப்பின.

விசாரணை

இதுபற்றி அறிந்ததும் ஆஸ்பத்திரியின் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் டாக்டர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் எவ்வாறு மின்கசிவு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்