சிக்கிம் மாநிலங்களவை எம்.பி. பதவி; பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
பா.ஜ.க. வேட்பாளர் டார்ஜி செரிங் லெப்சாவுக்கு எஸ்.கே.எம். கட்சி ஆதரவு தெரிவித்தது.
கேங்டாக்,
சிக்கிம் மாநிலத்தில் 'சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா' (எஸ்.கே.எம்.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் எதிா்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எஃப்.) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ஹிஷே லசுங்பாவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23-ந்தேதி நிறைவடைகிறது.
இந்த பதவிக்கு வரும் 19-ந்தேதி தோ்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில், பா.ஜ.க. சாா்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. டார்ஜி செரிங் லெப்சா, வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருக்கு எஸ்.கே.எம். கட்சி ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில் அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பா.ஜ.க. வேட்பாளா் டார்ஜி செரிங் லெப்சா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை மாநில சட்டமன்றத்தின் செயலாளரான தேர்தல் அதிகாரி லலித் குமாரிடம் இருந்து டார்ஜி செரிங் லெப்சா பெற்றுக்கொண்டார்.