நில முறைகேடு விவகாரம் : 14 வீட்டு மனைகளை திரும்ப ஒப்படைத்தார் சித்தராமையா மனைவி
நில முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 14 வீட்டுமனைகளையும் சித்தராமையாவின் மனைவி திரும்ப ஒப்படைத்தார்.;
மைசூரு,
கர்நாடகத்தில் சித்தராமையா (வயது 76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் ரூ.187 கோடியில் முறைகேடு நடைபெற்றுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதில் பழங்குடியினர் நலத்துறை மந்திரி நாகேந்திரா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதே வழக்கில் அந்த வளர்ச்சி வாரிய தலைவரான காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடா தத்தல் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசின் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கு வதற்குள் முதல்-மந்திரி சித்தராமையா மீதான மூடா நில முறைகேடு விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது. இது கர்நாடக அரசியலில் கடந்த ஒரு மாதமாக புயலை கிளப்பி வருகிறது
அதாவது மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு அங்குள்ள பிரதான விஜயநகர் லே-அவுட்டில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது. அவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை அந்த ஆணையம் கையகப்படுத்திக் கொண்டதால், அந்த வீட்டுமனைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு உத்தரவின்பேரில் மைசூரு லோக்அயுக்தா போலீசார் முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி, நிலத்தின் முன்னாள் உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதே விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா மீது நேற்று முன்தினம் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் சித்தராமையா மற்றும் அவரது மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்றும், அதுபோல் அவர்களின் வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. அமலாக்கத்துறையால் சித்தராமையா கைது செய்யப்படும் நிலையும் உருவாகி இருக்கிறது.
இந்த சூழலில், சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து சித்தராமையா மனைவி பார்வதி, நேற்று முன்தினம் இரவு 14 வீட்டு மனைகளை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று சித்தராமையா மனைவி பார்வதி, தனது மகனும், எம்.எல்.சி.யுமான யதீந்திராவுடன் மைசூருவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், 2021-ம் ஆண்டு தனக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் உள்ள 3-வது மற்றும் 4-வது ஸ்டேஜ் பகுதியில் மூடா ஒதுக்கிய 14 வீட்டு மனைகளுக்கான பத்திரப்பதிவை ரத்து செய்யும்படி கடிதம் கொடுத்தார். அதன்படி அதிகாரிகள் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்தனர். பின்னர் பார்வதி, யதீந்திரா ஆகியோர் மைசூரு தேவராஜ் மொகல்லாவில் உள்ள மூடா அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு 14 வீட்டுமனைகளுக்கான பத்திரப்பதிவை ரத்து செய்ததற்கான ஆவணங்களை, மூடா கமிஷனர் ரகுநந்தனிடம் வழங்கினார்