"பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி புனிதமற்றது"- சித்தராமையா பேட்டி

பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி புனிதமற்றது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2023-10-06 22:27 GMT

பெங்களூரு:

பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி புனிதமற்றது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

சித்தராமையா ஆறுதல்

சித்ரதுர்கா டவுன் காவடிகரஹட்டி பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் அசுத்த நீரை குடித்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா சித்ரதுர்காவுக்கு சென்றார். அப்போது அவர், அசுத்த நீரை குடித்து உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். பின்னர் அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடினமான சூழ்நிலை

கர்நாடகத்தில் 195 தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தாலுகாக்களிலும் வறட்சி நிலை நிலவுகிறது. வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு கர்நாடகம் வந்துள்ளது. 10 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து தனித்தனியாக ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். என்னை சந்தித்து பேசிய அந்த அதிகாரிகளிடம் வறட்சியால் ரூ.4 ஆயிரத்து 680 கோடி நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கோரியுள்ளேன். இந்த குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கிய பிறகு நிவாரண நிதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கிருஷ்ணா, நாராயணபுரா அணைகளை தவிர காவிரி உள்ளிட்ட பிற அணைகளில் நீர் இல்லை. அதனால் வரும் நாட்களில் கடினமான சூழ்நிலை உண்டாகும். பத்ரா மேலணை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரத்து 300 கோடி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைவாக விடுவிக்குமாறு கோரி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

புனிதமற்ற கூட்டணி

நாங்கள் நீர்ப்பாசனத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். 7-வது ஊதிய குழு தலைவருடன் ஆலோசனை நடத்தினேன். அந்த குழுவின் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு சம்பள உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். வாரிய தலைவர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளோம். பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி குறித்து அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது புனிதமற்ற கூட்டணி. கர்நாடகத்தில் புதிதாக 1,000 மதுபான கடைகளை திறக்கும் திட்டம் இல்லை. உத்தரவாத திட்டங்களால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள். மாநிலத்தின் நிதிநிலையை சீர்குலைத்தவர்களே பா.ஜனதாவினர் தான். எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.

நிதி பற்றாக்குறை

பத்ரா மேலணை திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லை. சிவமொக்காவில் பா.ஜனதாவினர் உண்மை கண்டறியும் சோதனை நடத்துகிறார்கள். அந்த அளவுக்கு என்ன தவறுகள் நடந்துள்ளது?. எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, சிவமொக்கா வன்முறையில் ஈடுபட்டவர்களை விடக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்